Skip to main content

வரலாற்றில் முதல்முறை... டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக பாதிரியார்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

For the first time in history ... Priest as a member of TNPSC!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி) நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு தற்போது நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 62 வயதை எட்டும்வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பர்.

 

முனியநாதன் ஐ.ஏ.எஸ்: சென்னையைச் சேர்ந்த முனியநாதன் 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்தவர். முதுகலை பொருளாதாரம் உள்ளிட்ட நிதி சார்ந்த படிப்புகளைப் பயின்ற முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். தற்போது தொழிலாளர் நல ஆணையராக இருக்கிறார்.

 

ஜோதி சிவஞானம்: சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். பொருளாதாரப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல் அம்பேத்கர் பொருளாதார மையத்தின் இயக்குநராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

 

முனைவர் அருள்மதி: சென்னை எத்திராஜ் கல்லூரியின் உயிர் வேதியியல் பேராசிரியர். அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

 

ராஜ்மரியம் சூசை: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பணியாற்றிவருகிறார். இவர் ஒரு பாதிரியார் ஆவார். ஒரு பாதிரியார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.