திருக்குறள் நூலை வெளியிடுவதும், தமிழ்மொழி சிறந்த மொழி என்று பேசுவதும் மோடியின் புதிய வித்தை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மனிதநேய சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு சேலத்தில், செவ்வாய்க்கிழமை (நவ. 5) பாராட்டு விழா நடந்தது.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் புள்ளையண்ணன் வரவேற்றார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, 'வடநாட்டில் பெரியார்' என்ற நூலை வெளியிட்டு, பேசினார்.
பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தை மாற்ற முடியாததால், பாஜகவினர் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவரை யாராலும் அவமதிக்க முடியாது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. அவருடைய சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இச்சம்பவத்தைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை.
திருக்குறள் நூலை வெளியிட்டு, தமிழ்மொழி சிறந்தமொழி என பேசிக்கொண்டு வருவது மோடியின் புதிய வித்தையாகும். வித்தைகளில் சிறந்த வித்தை மோடி வித்தைதான். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கிளர்ச்சியை தொடங்க உள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார். திராவிடர் கழக நிர்வாகிகள், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.