
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜாயின்ஷா. 23 வயதான அவரை காணவில்லை எனக் கூறி அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.
சைதாப்பேட்டை தாடண்டர் விளையாட்டுத் திடலின் அருகே ஜாயின்ஷா தாக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற உறவினர்கள் ஜாயின்ஷாவை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ஜாயின்ஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜாயின்ஷாவின் சகோதரர் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தாடண்டர் நகரின் அருகில் இருக்கும் மைதானத்தின் எதிரில் இருக்கிறான் எனச் சொன்னார்கள். நாங்கள் உள்ளே சென்றோம். இந்திக்காரர்கள், தமிழ்க்காரர்கள் அவனை அடித்து ஒரு அறையில் வைத்திருந்தனர்.
நாங்கள் அவன் அருகே சென்றபோது சுயநினைவின்றி தான் இருந்தான். எழுந்து நிற்க வைக்க முயன்றபோது என்னால் முடியவில்லை எனக் கூறினான். சிறிது தண்ணீர் குடித்தான். நான்தான் என் தோளில் தூக்கினேன். அப்படியே கீழே விழுந்துவிட்டான். கருவிழி மேலே சென்றுவிட்டது. ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தேன். அவர்கள் போன் எடுக்கவில்லை. போலீசுக்கு போன் செய்தேன். அவர்களும் சரியாகப் பதிலளிக்கவில்லை.
நான் என் வண்டியிலேயே அவனை உட்காரவைத்து, நான் பிடித்துக்கொண்டே வந்துவிட்டேன். மருத்துவமனையில் சேர்த்த பின், இறந்து 20 நிமிடங்கள் ஆகிறது எனச் சொல்லிவிட்டார்கள்” எனக் கூறினார்.
அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சைதாப்பேட்டை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.