பாஜகவின் கனவுத் திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த குழு 191 நாட்களில் 65 கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. இப்படியாக மொத்தம் 21,588 கருத்துகள் பெறப்பட்ட நிலையில், 80 சதவீத கருத்துகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக இருந்துள்ளது. 47 அரசியல் கட்சிகளில் 32 அரசியல் கட்சிகள் ஆதரவாகவும், 15 அரசியல் கட்சிகள் எதிராகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஓரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. தற்போது அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன் முடிவுகள் வெளியான 100 நாட்களில் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், 3 தேர்தல்களுமே ஒரே வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெற வேண்டும்’ என்பது இந்த அறிக்கையின் சாரம்சம்.
இந்த நிலையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ஜனநாயக ஒற்றுமை என்றால் உங்களுக்கு ஒவ்வாமையா என்று கேட்டிருந்தார். இந்த நிலையில், வானதி சீனிவாசனின் பதவிக்கு தற்போது சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “வானதி சீனிவாசன் அவர்களே, ஜிஎஸ்டியை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே மாதிரி தேர்தல் நடத்த வழக்காடுகிறீர்கள். பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள். ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின் தீய எண்ணத்தை முறியடிப்போம்.
கறுப்பு பணத்தை ஒழிக்கவே "ஒரே நாடு ஒரு தேர்தல்" என்று நீங்கள் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? கறுப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம், கறுப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்று கருப்பு பண ஒழிப்பை காரணமாக சொல்லி கடந்த காலத்தில் நீங்கள் நிறைவேற்றிய நாடகங்களைக் கண்டு மக்கள் சிரித்துக்கொண்டிருப்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா? நேர விரயம் பற்றி வேறு பேசியுள்ளீர்கள். தமிழ்நாடு, கேரளாவில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த முடிவதற்கு உங்கள் கட்சி இந்த மாநிலங்களில் வளராததுதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் பேசுவது உங்களுக்கு தெரியுமா?
உத்தரப் பிரதேசம், பீகாரில் எல்லாம் 7 கட்டங்கள் நடக்கிறதே! உங்களால் ஒரு கட்டம், இரண்டு கட்டமாக அங்கே நடத்த முடியாமல் போவதற்கு காரணம் யார் என்பதை உபி மக்கள் புரிந்து கொண்டதால்தானே உங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். நிதி விரயம் என்று சில ஆயிரம் கோடிகளுக்கு கவலைப்படும் நீங்கள் கார்ப்பரேட் வரிகளை 10 ஆண்டுகளில் மொத்தம் 11 சதவீதம் குறைத்தீர்களே, அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு எத்தனை லட்சம் கோடிகள் என்று கணக்கு போட்டு சொல்லுங்களேன். வாரிசுரிமை வரி போட மாட்டேன், அம்பானி அதானி எல்லாம் "பாவம்" என்று அடம் பிடிக்கிற நீங்கள் இந்தியாவின் டாப் 100 சூப்பர் ரிச் மீது வாரிசுரிமை வரி போட்டால் எவ்வளவு லட்சம் கோடி வரும் என்பதை கணக்கு போட்டு சொல்லுங்களேன்.
தேர்தல் வெற்றி, தோல்விக்காக நாங்கள் பேசவில்லை. ஒன்றியத்தில் ஒரு ஆட்சி வரலாம், போகலாம். மாநிலங்களிலும் ஆட்சிகள் வரலாம், போகலாம். மக்களின் நம்பிக்கையை இழக்கலாம். இரண்டு மட்ட தேர்தல்களுக்கான பிரச்சினைகள் வேறு. மக்களின் எதிர்பார்ப்புகள் வேறு. எதற்கு இயந்திர கதியாக கால்களை கட்டிப் போட முனைகிறீர்கள்? கூட்டாட்சி கோட்பாடு நீர்த்துப் போக குறுக்கு வழி தேடுகிறீர்கள். ஆறு ஆண்டுகளாக மக்களவையின் துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாத பாஜக மக்களாட்சியின் மகத்துவத்தையும், தேர்தலின் மகத்துவத்தையும் பற்றி ஆயிரம் பக்கத்துக்கு அறிக்கை கொடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி வானதி சீனிவாசன் அவர்களே,
GST யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே மாதிரி
தேர்தல் நடத்த வழக்காடுகிறீர்கள்.
பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும்… pic.twitter.com/NG5qaXoBeX— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 20, 2024