தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி பாண்டி. இவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான், இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கையில் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் காளி பாண்டியிடம் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே மையத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளார். அச்சமயத்தில் எக்ஸ்ரே பிலிம் தீர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எக்ஸ்ரே ரிப்போர்ட் பிலிமுக்கு பதிலாக, மருத்துவமனை ஊழியர்கள் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காளி பாண்டி, “எக்ஸ்ரே ரிப்போர்ட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே ரிப்போட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முன்னாள் அமைச்சர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்திருப்பது எலும்பு முறிவு வலியை விட மிக மோசமானது. தமிழகமெங்கும் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். அதனைத் தடுக்கின்ற பணிகளில் அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறபோதே, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்த கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.