Skip to main content

“விளையாட்டிற்கு சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் உண்டு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Sports have the power to create social harmony Chief Minister M.K. Stalin

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எல்லார்க்கும் எல்லாம், அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நம் இலக்கோ அதேபோல, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம்முடைய குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மாமல்லபுரத்தில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சர் டூர், சென்னை ஓப்பன் சேலஞ்சர், ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, ஸ்குவாஷ் உலக கோப்பை 2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை  தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம். அதே நேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்திக் கொண்டு வருகிறோம். இந்தியாவிலேயே முதன் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள், ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அரங்கம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி. முதல் கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் மினி ஸ்டேடியம்.  புதிய மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையங்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Sports have the power to create social harmony Chief Minister M.K. Stalin

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் 62 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை வரும் 24 ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் இந்த ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் வெகு விரைவில் துவங்கப்பட இருக்கிறது. மணிப்பூரில் நிலவும் பிரச்சனைகளால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களை சகோதர உணர்வோடு தமிழ்நாட்டிற்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது நமது திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலர், இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா 2023 லோகோவில் வான்புகழ் வள்ளுவர் இடம் பெற்றிருக்கிறார். அந்தச் சிலை கலைஞரால், அய்யன் திருவள்ளுவருக்கு இந்திய நாட்டின் தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது. அதேபோல், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் அதில் இடம் பெற்றிருப்பது நமக்குக் கூடுதல் பெருமை. விளையாட்டையும், வளர்ச்சியின் இலக்காக கருதி செயல்பட்டு வருகிறோம். சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, எல்லோருடைய நல்வாழ்வுக்கும் விளையாட்டு உதவுகிறது. அன்புப் பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு. 

Sports have the power to create social harmony Chief Minister M.K. Stalin

விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை வரவேற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து உளி ஓவியங்கள் புத்தகத்தை வழங்கி வரவேற்றார். 

சார்ந்த செய்திகள்