Skip to main content

2 ஆண்டுகள் தண்டனை விதித்தால் மட்டுமே பதவி இழப்பு - உயர்நீதிமன்றம்

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Senthil Balaji will be removed from ministerial post only if sentenced 2 years in jail says chennai HC

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார். 

 

இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. 

 

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதில் விரும்பம் இல்லை எனக் கூறி அதனை ஆளுநர் மறுத்திருந்தார். ஆனால் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது. 

 

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து வழக்கறிஞர்கள் ரவி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறாரே தவிர, அவரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் என்று எங்கே தெரிவித்திருக்கிறார் என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே பதவி இழப்பு செய்யலாம் என்று கூறிய நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதல்வர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று வழக்கை மதியத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.