சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். அதன்படி கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் நேற்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும், குற்றவியல் நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்” எனத் தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு (471 நாட்கள்) புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று மாலை வெளியில் வந்தார். அப்போது அங்குக் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்று ஆரவாரம் செய்தனர். அதே சமயம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவரை மாலை அணிவித்து வரவேற்றார். இதனையடுத்து சென்னை மெரினாவில் உள்ள மறைந்த தமிழக முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் நிபந்தனையின்படி, இன்று (27.09.2024 - வெள்ளிக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் இருந்து திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் அவரை செந்தில் பாலாஜி சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் திமுக பவள விழாவிலும் செந்தில் பாலாஜி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.