Skip to main content

விருத்தாசலத்தில் களைகட்டிய 'விதை திருவிழா'

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

மரபுவழி விதைகளை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரபுவழி வேளாண்மை விதை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

உழவர்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த விதை திருவிழாவில், கருப்புக்கவுனி, கார்குறுவை, கிச்சலிசம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி போன்ற மரபு ரக நெல் ரகங்கள், தானியங்கள், நாட்டு ரக காய்கறி விதைகள், சிறுதானியங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணிகள், கைவினைப் பொருட்கள், துணி பைகள் பயன்பாடு மற்றும் விவசாயிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தும் விதமாகவும் இந்த விதைத் திருவிழா நடைபெற்றது.

 

முன்னதாக தேவார பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் திருமுதுகுன்றத்தின் சிறப்புகளைக் கூறும் தேவாரப் பாடல்களைப் பாடி பொருள் கூறினர். அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக் குழுவினரின் பறை இசை தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க தலைவர் முருகன்குடி முருகன் தலைமை தாங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். விருத்தாசலம் வட்டாட்சியர் ம.தனபதி தொடக்க உரையாற்றினார். தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு, தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் கண்மணி குணசேகரன், கவிஞர் மா.ஆ.தாமு, மரம் கருணாநிதி, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு திருப்பூர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மு.பாண்டியன், மரபுவழி உழவர் காரைக்கால் பாஸ்கர், இயற்கை வேளாண் வல்லுநர் நாட்ராயன், மரம் பரமானந்தம் மற்றும் இயற்கை வழி வேளாண் ஆர்வலர்கள்,  இயற்கை விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், இயற்கை வழி வேளாண்மை குறித்த விளக்க உரை ஆற்றினர்.

 

ஒவ்வொரு விவசாயிகளும் விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய  விதை திருவிழாவில் தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன், தமிழ்நாடு மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் வே.மணிவாசகம், நஞ்சில்லா விதை கூட்டமைப்பு இளையராஜா மற்றும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விதைகள், உணவு பொருட்களை வாங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவித்த இயற்கைவழி உணவு பொருட்களையும் விதைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.