
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி செல்லும் வழியில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரத்தில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த 17 வயது மாணவன் பேருந்தில் பள்ளிக்கு சென்ற போது மூன்று பேர் கொண்ட கும்பலால் அரிவாள் வெட்டுக்கு உள்ளான சம்பவம் கடந்த 10 ஆம் தேதி பாப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான அதிகாரிகள் கேட்டறிந்தனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனையும் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள், சிகிச்சைகள் குறித்து கேட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வும் மேற்கொள்ளவும், மாணவன் படித்து வரும் பள்ளியில் மாணவனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.