
காஷ்மீர் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த 18ஆம் தேதி நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ வீரர் கருப்பசாமி மறைவுக்கு இரங்கலும் அனுதாபமும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், அந்த அறிக்கையில் உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரை நேரில் சென்று அவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் ரூ.5 இலட்சம் அவர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும் கூறியிருந்தார்.
அதன்படி கருப்பசாமி குடும்பத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 இலட்சம் நிதி உதவி வழங்கினார்.

நேற்று திமுக எம்.பி. கனிமொழி, கருப்பசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கருப்பசாமியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அவர் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.2 இலட்சம் நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.