Skip to main content

நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு... கேரளா மாணவர்களுக்கு அனுமதி இல்லை!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

கரோனா தொற்று பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசின் முயற்சியால் கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. இதையடுத்து நாளை (புதன்) முதல் 9,10,11,12 மற்றும் கல்லூரிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தூய்மை செய்யப்பட்டு சுகாதார பணிகளும் முடிந்துள்ளன. மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டிருக்க வேண்டும். அதேபோல் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் இதை அந்த நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடத் தவறிய கல்லூரி மாணவ மாணவிகள் கரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.

 

இந்நிலையில் குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இங்குள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் படிக்கின்றனர். அந்த மாணவர்களும் நாளை கல்லூரிகள் திறப்பதால் கல்லூரிக்கு வர இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகம் இருந்து வருவதால் அங்கிருந்து தற்போது மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வர மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அதையும் மீறி வரும் மாணவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுமென்றும் மற்ற மாணவர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் பள்ளிகளை பொறுத்தவரை தமிழக எல்லையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் கேரளா மாணவ மாணவிகளுக்கும் தற்போது அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க 10 பள்ளிகளுக்கு வருவாய் துறையை சார்ந்த ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்