
சேலத்தில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக தலைமைக் காவலர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கஞ்சா, குட்கா, பான் பராக், ஹான்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாநகரில் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், காவல்துறையினர் ரெய்டு வரும் தகவல்களை போதை கும்பலுக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் செவ்வாய்பேட்டை எஸ்.ஐ பாலன், வீராணம் காவல் நிலைய காவலர் வேல் விநாயகம் ஆகிய இருவரும் அண்மையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, சூரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் முனியன் என்பவரும், போதைப்பொருள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.