Skip to main content

திருடிய குற்றத்திற்கு தண்டனை திருமணமா? வைரல் ஆகும் கல்யாண பேனர்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

மேட்டூர் அருகே, திருமண ஜோடிக்கு வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான வாழ்த்து பேனர், பலரையும் கவர்ந்துள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் ஜன. 30, 2020ம் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடக்கிறது. இதற்காக மணமக்களை வாழ்த்தி, அவர்களின் நண்பர்கள் மாசிலாபாளையத்தில் ஒரு பேனர் வைத்துள்ளனர். வித்தியாசமான வாசகங்களுடன் கூடிய இந்த பேனர், பலரையும் கவர்ந்துள்ளது. 

salem district mettur area marriage function banner different


வாலிபர் கைது என பரபரப்பான தலைப்பிட்டு, பிரம்மாண்டமான அளவில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், கைதானவர்: ஏ.ஸ்டீபன்ராஜ்; கைது செய்தவர்: ஏ.ஹெலன்சிந்தியா என்று குறிப்பிட்டுள்ளனர். ஸ்டீபன்ராஜ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பெண்ணின் மனதை  திருடியதுதான் மணமகன் செய்த குற்றமாக கூறப்பட்டுள்ளது. அதற்கு தண்டனையாக மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பேனரின் இடது ஓரத்தில் மணமக்களின் புகைப்படங்கள் பெரிய அளவில் அச்சிடப்பட்டு உள்ளன.


இதற்கு சாட்சிகளாக, அத்தான்மார்கள் என்று பதிவிட்டு நான்கு இளைஞர்களின் படங்கள் பேனரில் அச்சிடப்பட்டு உள்ளன. 


கல்யாணம் ஆன புதுமணத் தம்பதிகளே மகிழ்ச்சியை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடும் காலம் இது. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்று வடிவேல் பாணியில் சொல்லும் அளவுக்கு, அழைப்பிதழ் அச்சிடுவதில் தொடங்கி கல்யாணத்தை நடத்தி முடிப்பது வரை எல்லாவற்றிலும் வித்தியாசமான சிந்தனையை புகுத்தி வருகின்றனர். அத்தகைய மாற்று சிந்தனையின் வெளிப்பாடுதான் வாலிபர் கைது என்ற பேனரும்.

salem district mettur area marriage function banner different

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த பேனரை சிலர் படம் எடுத்து, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட, கடந்த சில நாள்களாக வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா துறையில் அடிக்கடி நடக்கும் கதை திருட்டு போல, வித்தியாசமான இந்த பேனரும், ஏற்கனவே வேறு ஒரு ஊரில் அச்சிட்டு அங்கும் பரபரப்பாக பேசப்பட்ட சமாச்சாரத்தையே தாங்கி வந்திருக்கிறது. 


கடந்த 2016ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் மலைக்கோட்டாலம் என்ற ஊரிலும் இதேபோல் வித்தியாசமான முறையில் திருமண வாழ்த்து பேனர் அச்சிடப்பட்டு இருந்தது.


அந்த பேனர், 'மலைக்கோட்டாலத்தில் பரபரப்பு' என்று பத்திரிகை செய்தி தலைப்பு போல அச்சிடப்பட்டு இருந்தது. அதில், வாலிபர் கைது, குற்றம்: பெண்ணின் மனதை திருடியது; தண்டனை: மூன்று முடிச்சு; கைது செய்யும் நாள்: 5.12.2016 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 


கைது செய்பவர்: எம்.அஞ்சலை, கைது ஆபவர்: எஸ்.முத்து என்கிற தமிழ்ச்செல்வன் என்றும் முக்கிய சாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் 7 இளைஞர்களின் படங்களும், அதன் தொடர்ச்சியாக தளபதி பாய்ஸ் என்றும் அந்த பேனர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதே பேனரைத்தான் காப்பி அடித்து தற்போது ஹெலன்சிந்தியா= ஸ்டீபன்ராஜ் மணமக்கள் ஜோடிக்கும், அவர்களுடைய நண்பர்கள் வாழ்த்து பேனராக வைத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்