Skip to main content

“நான் இறந்தால் அதற்கு முகாம் அதிகாரிகளே பொறுப்பு” - முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ராபர்ட் பயஸ்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
robert pius letter to CM MK Stalin

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு அனுப்பியும் உள்ளார்.

அந்த மனுவில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள்.

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் நானும், ஜெயக்குமாரும், சாந்தனும், முருகனும், அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்குக் கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்களாக அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளானேன்.

எனது உடல் நலத்தை சரி செய்ய நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளது. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும்,  விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நான் இங்கேயே இறப்பது உறுதி. இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கிவருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன்’ என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

சாந்தன் மறைவு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
High Court question to Tamil Nadu Govt for Santhan's disappearance

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (28-02-24) உயிரிழந்தார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தியிருந்தது. 

சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.

அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல்  இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.