கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே ரூ 6 கோடி மதிப்பில் போடப்பட்ட புதிய தார் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குமராட்சி அருகே ம.புளியங்குடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு குமராட்சியில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் பகுதியை ஒட்டி தார் சாலை ஒன்று செல்கிறது. 7 கிமீ நீளம் உள்ள இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலையாகும். இந்த சாலையை சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 7கிமீ சாலை இப்பகுதியில் உள்ள சுமார் 15 கிராமங்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
இந்த சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்ட நிலையில் சாலையை பயன்படுத்தும் 15 கிராம மக்களும் கடும் அவதியடைந்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க ரூ 6 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. சாலையை சீரமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டது. இதை பார்த்த இந்த சாலையை பயன்படுத்தும் 15 கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த மாதம் சாலை போடும் பணி முழுமையாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 கிராம பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாலையின் ஓரத்தில் வடக்குராஜன் வாய்க்கால் இருப்பதால் சாலை பணியை துவக்கும் முன்பு வடக்கு ராஜன் வாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டிவிட்டுதான் பணியை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஏனோ தானோ என்ற நிலையில் சாலை பணியை மேற்கொண்டதால்தான், இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்கிறனர் மக்கள். பல்வேறு அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர்கள்.
இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரியான முறையில் சீரமைப்பு செய்யாததால், சாலையில் விரிசல் ஏற்பட்டு மக்கள் வரிப்பணம் ரூ 6 கோடி விரையம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் இப்பகுதி மக்கள்.