தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தை சம்பவத்தன்று (தடை காரணமாக குழந்தையின் பெயரும் படமும் தவிர்க்கப்பட்டடுள்ளது.) காலையில் வழக்கம் போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த செயினை வாயில் கவ்வியபடியே விளையாடியிருக்கிறது. திடீரென அந்தச் செயினில் உள்ள உலோக டாலர் அறுந்து போனதின் விளைவு தவறுதலாக அந்த உலோக டாலரை குழந்தை விழுங்கி விட்டது. உலோகப் பொருளான அந்த டாலர் வயிற்றுக்குள் செல்லாமல் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில். சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
இதைக் கண்டு பதறிய பெற்றோர் துடித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை தூத்துக்குடியின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்த்தனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் குழந்தையின் மேல் உணவுக் குழாய் மட்டத்தில் தொண்டையில் உலோக டாலர் சிக்கிக் கொண்டதைக் கண்டறிந்தனர்.
இது போன்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியின் டீன் நேருவின் அறிவுறுத்தலின் பேரில் காது – மூக்கு – தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் சிவசங்கரி, சந்தான கிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ், மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழுவின் பலராம கிருஷ்ணன், சுகிர்தராஜ் ஆகியோர் அடங்கி குழுவினர் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து உணவுக்குழாய் உள்நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த உலோக டாலரை அகற்றினர்.
குழந்தைக்கான இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாகவே செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனின் அவசரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக்குழுவினரை. டீன் நேரு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மற்றும் துணைக் கண்காணிப்பாளர் குமரன் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பாராட்டினர்.
குழந்தை விழுங்கிய டாலரைச் சுற்றியுள்ள கூர்மையான பாகங்கள் குழந்தையின் தொண்டையில் அழுத்திக் கொண்டிருந்தது. எனவே கவனமாக சிகிச்சையை மேற்கொண்டோம். மிகவும் ரிஸ்க்கான இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் திறம்பட மேற்கொண்டனர் என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தினர்.
4 வயது குழந்தை தொடர்பான உட்சபட்ச சிக்கலான தொண்டையில் சிக்கிய உலோக டாலரை அரசு மருத்துவர்கள் குழு அகற்றியது அரிய சவாலான சாதனையாகப் பேசப்படுகிறது.