சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்ட பிறகு விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. சென்னை, கடலூர், காயல்பட்டினம் போன்ற இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜன.08-ந்தேதி காவல் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய தமிழ்நாடு காவல்துறை அப்துல் சமீம், தவ்பீக் என தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த நாகர்கோவில் பாறசாலையை சேர்ந்த அப்துல் சமீம், கடலூரை சேர்ந்த காஜாமைதீன், ஜாபர் அலி, அப்துல் சமது உள்ளிட்ட சிலர் சிக்கினர். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதால், வழக்கு அண்மையில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், காயல்பட்டினத்தில் உள்ள தவ்பீக்கின் உறவினர் பாத்திமா வீட்டில் இன்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து வங்கி பாஸ்புக், செல்போன் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, புத்தூர் கொள்ளுமேடு பகுதியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. தீவிரவாத கும்பலுக்கு சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிம்கார்டு வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில், அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.