Skip to main content

ரேஷன் அரிசியில் புழு... கொதிப்படைந்த பொதுமக்கள்...!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

ரேஷன் கடையில் அரிசியை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றன. ஆனால் அங்கு சாப்பாட்டுக்கு வழங்கப்படும் அரிசி முழுவதும் புழுக்கல் இருப்பது பொதுமக்களை கலங்கடிக்கவே செய்துள்ளது.

 

Ration rice-Thanjavur

 



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட வழங்கல் பகுதிக்கு உட்பட்ட  ரேசன் கடைகளுக்கு இந்த மாதத்திற்கு வந்துள்ள அரிசிகள் முழுவதும் புழுக்கள் நிரம்பிய மூட்டையாக வந்துள்ளது. கும்பகோணம் மேலக்காவேரி சாவடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை பெற்று பயன்படுத்தி வருவது வழக்கம்.

அதுபோலவே இம்மாதத்திற்கு வந்துள்ள அரிசியை இன்று விநியோகிக்கப்பட்டது, அதனை மக்கள் வரிசையில் நின்று முண்டியடித்து வாங்கிசென்றனர். அந்த கடையில் சாப்பாட்டிற்கு வழங்கிய அரிசியில் புழுக்கள் மிகுதியாக இருந்ததை வீட்டிற்கு சென்று பார்த்து மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி ரேஷன் கடையில் அரிசி வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

"உலகமெங்கும் வைரஸ் மற்றும் காய்ச்சல் பரவி வரும் இந்த நேரத்தில் தமிழக அரசே புழுக்கள் உள்ள அரிசியை வினியோகிப்பது சரியா,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலக்காவேரி சாவடியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்து புழுக்கள் உள்ள அரிசியை அப்புறப்படுத்தி சுத்தமான ரேஷன் அரிசியை மக்களுக்கு உடன் வழங்க வேண்டும்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

"மீண்டும் இப்பிரச்சனை தொடர்ந்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும்" என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

சார்ந்த செய்திகள்