Skip to main content

புரட்டாசி எஃபெக்ட்; ஒரே நாளில் 17 லட்சத்திற்கு விற்பனையான காய்கறிகள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Puratasi Effect; 17 lakh worth of vegetables sold in farmers markets in a single day

 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் மக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

 

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

 

ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865 -க்கு விற்பனையானது. அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து 122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.