புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி வடக்கு கிராமம் ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சௌமியா (வயது 21). இவர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இத்தகைய சூழலில் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை (25.12.2024) இரவு சௌமியா திடீரென காணாமல் போனதாக அடுத்த நாள் ரமேஷ் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (27.12.2024) காலை அதேப் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சடலமாக மிதந்ததையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். வடகாடு போலீசார் சௌமியா உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர். பிரேதப் பரிசோதனை செய்த நிலையில் சௌமியா சாவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து சாலை மறியல் செய்ததுடன் சடலத்தை வாங்க மறுத்துவிட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் சௌமியா இறப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கியது. அதே போல பா.ஜ.க. மாநில தலைமையும் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட காவல்துறை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ரமேஷ் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகளும் உண்மை நிலை அறியச் சம்பவ இடத்தையும், கிணறு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் விதமாகச் சௌமியா வீடு உள்படக் கிராமத்தில் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைத்தள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சௌமியா இறப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு சௌமியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கடைசியாக அவர் யாரிடம் பேசியுள்ளார், யாருடன் வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார், குறுஞ்செய்திகள் பகிர்ந்துள்ளார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். சில வாட்ஸ்அப் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை யார் அழித்தது, எதனால் அழித்தனர் என்பது பற்றியும் அடுத்த கட்ட விசாரணைக்கு போலீசார் தயாராகி வருகின்றனர். மேலும் சில எண்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சௌமியாவின செல்போன் முழுமையாக ஆய்வு செய்து முடிக்கும் போது அவரது இறப்பு குறித்தும் தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.