Skip to main content

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரமும் உரிமையும் ஒரே நாளில் பறிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

"கரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, அத்தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை  நெருக்கடியில் நிறுத்துவதாகும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றின் மாபெரும் துயரம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சீனாவிலிருந்து பரவி, இன்றைய தினம் உலகின் பல்வேறு நாடுகளிலும் புகுந்திருக்கும் கரோனா எனப்படும் வைரஸ் நோயால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,281 ஆகிவிட்டது. 111 உயிர்களை இழந்துள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 621 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6 உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னும் இந்த எண்ணிக்கை எந்த அளவுக்கு இழுத்துச் செல்லுமோ, இழப்புகளும் இன்னல்களும் எத்தனை தூரம் நீளுமோ, என்ற பதற்றம் துளியும் தணிந்தபாடில்லை.

  mks


 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்று சீனாவிலிருந்து பரவிய காலத்திலேயே, அதாவது ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்குமானால், இந்தியாவுக்கு இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரைக்கும் மத்திய - மாநில அரசுகள் காட்டிய அலட்சியம்தான் இந்த அவலமான சூழ்நிலைக்குக் காரணம் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்; அனைவரும் உணர்ந்துதான் ஆகவேண்டும்.
 

கரோனா தொற்றை மார்ச் இரண்டாவது வாரம் வரைக்கும் உள்ளே அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியதற்கு என்ன காரணம் என்பதைக் காலம் உரிய கட்டத்தில் சுட்டிக்காட்டும். இதைத்தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளாவது முறையானதாக இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, தமிழகத்தில்தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்துக்குக் குறைவான நிதியை ஒதுக்கியிருப்பதற்கு என்ன காரணம்?

 

nakkheeran app


பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலம் என்பது காரணமா?
 

234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 510 கோடிதானா?

மற்ற மாநிலத்துக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை; தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்குகிறீர்கள் என்றுதான் கேட்க விரும்புகிறேன்.

தமிழக அரசு முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும், பின்னர் 3200 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்திருப்பது மொத்தமே 510 கோடி ரூபாய் என்றால், இதிலிருந்து தெரிவது, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை  மட்டும்தான்; கரோனா அரசியல்தான்!
 

இந்த நிலையில் இன்னொரு பின்னடைவாக, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகாலத்துக்கு கிடையாது என்று அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரமும், உரிமையும் ஒரே நாளில் பறிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை இயற்றுபவர்கள் நிலைமையே இதுதானா?
 

நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்பது அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிச்சலுகை அல்ல; அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக மக்களின் தேவை அறிந்து, அதை நிறைவு செய்திடும்  திட்டங்களுக்கான தொகைதான்.
 

ஓர் அரசு நிறைவேற்றும் திட்டம் என்பது, நாடு முழுமைக்குமானதாக, மாநிலம் முழுமைக்குமானதாக, இரண்டு மூன்று மாநிலங்களை ஒன்றிணைப்பதாக அமையும். அப்படி அமையும்போது தொகுதி அளவில், வட்டார அளவில் கவனிக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான பல காரியங்கள் விட்டுப் போகும். சில பகுதிகள், யாராலும் கவனிக்கப்படாமலேயே விடுபட்டுப் போய்விடும்; மக்களின் அதிருப்தி வளரும். அப்படி விடுபட்டுப் போகும் வட்டார - தொகுதி வளர்ச்சிக்குத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி செலவு செய்யப்படுகிறது. இதை நிறுத்துவதன் மூலமாக சாமான்ய மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, அவை  நிறைவேறுவது தடுக்கப்படும், வட்டார விருப்பங்கள் பாதிக்கப்படும்.
 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, அத்தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை  நெருக்கடியில் நிறுத்துவதாகும்.
 

இதனை ஜனநாயக வழிமுறை என ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே நியாயமானதாகும். சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய பிரச்சனைகள் உயிரிழப்புகளில் கொண்டுபோய் விடுவதாக மாறிவரும் சோகமான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அனைவரும் ஏற்கத் தகுந்த காரியங்களில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்; ஈடுபடும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.