சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கிய இளைஞர் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மருத்துவர் பாலாஜி கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம், சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாஜியை, பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா இன்று (15-11-24) காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுககாரர்கள், புரோட்டா கடைக்கு சென்றாலும் காசு கொடுக்காமல் சாப்பிட்டு வருவார்கள். கேட்டால் அடிப்பார்கள். ஆகவே, இந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு விரோதமாக இருக்கிறது. அது தற்போது உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. மருத்துவரின் சிகிச்சை சரியில்லை என்று ஊடகங்கள் மூலமாக பொய் செய்தியை பரப்ப திமுக முயற்சி செய்கிறது. இது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் ஏன் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கப் போகிறது. சும்மா விளையாடுவதற்காகவா துணை முதல்வரை போட்டு இருக்கிறீர்கள்? அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார். இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது?. இந்த அரசாங்கம் செயல்படாத காரணத்தினால் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.