
அந்தியூர் அருகே சண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போட்டுக் கொண்டிருப்பதாக அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் சிறப்பு போலீஸ் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, மற்றும் போதை மாத்திரையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள். பின்னர் பிடிபட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெங்கடேசன், சவுந்தர் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 50,000 மதிப்புள்ள போதை ஊசி, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.