தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை திமுகவினர் கூட்டணி கட்சியினருடன் முற்றுகையிட முயன்றனர். இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.