கடலூர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் பேரூராட்சிகளில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய நகரமாக விருத்தாசலம் வளர்ந்துள்ளது. விருத்தாசலம் கோட்டம், விருத்தாசலம் தாலுகா, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், (விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் இணைந்த) கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும், மாவட்டத்திலேயே மிகப் பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் ஆராய்ச்சி நிலையம், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களையும் இணைக்கக் கூடிய மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோவில் என வர்த்தகம், ஆன்மீகம், விவசாயம், போக்குவரத்து என பல துறைகளிலும் தனித்தன்மையுடன் விளங்குகிறது.
அதேசமயம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளான தொழுதூர், மங்களூர், சிறுப்பாக்கம், திட்டக்குடி, வேப்பூர், நல்லூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், விருத்தாசலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அரசின் திட்டங்களைப் பெறுவதற்காகவும், அரசிடம் குறைகளைக் கூறுவதற்காகவும் மாவட்ட தலைநகரான கடலூருக்குச் செல்வதற்குப் பல பேருந்துகள் மாறி, பல மணிநேரங்கள் கடக்க வேண்டியுள்ளது. இதனால் பண விரயம், கால விரயமும் ஏற்படுகிறது.
இதனால், பல வகைகளிலும் முக்கியத்துவம் மற்றும் அத்தியாவசியம் கருதி, விருத்தாசலம் பகுதியை கடலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, வேப்பூர், மங்கலம்பேட்டை, திருமுட்டம் ஆகிய பகுதிகளை இணைத்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்கறிஞர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், பொது நல இயக்கங்கள் அவ்வபோது தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ‘விருத்தாசலம் மாவட்டம்’ அமைக்கக் கோரி விருத்தாசலம் பாலக்கரையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதேபோல் மங்கலம்பேட்டையிலும் பொதுநல அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், 25 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடும் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
அதேசமயம், விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு முன்பு விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில், இன்று (20-ஆம் தேதி) சனிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், அந்தப் போராட்டத்திற்கு அனைத்து வணிகர்களும் ஒத்துழைப்பு தந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கத்தினர், வர்த்தகர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
மேலும் ஒவ்வொரு கடையாகச் சென்று கடைகளை அடைக்க வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மனிதச் சங்கிலி போராட்டம் மட்டுமே நடந்தது. மாறாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவில்லை. இதற்குப் பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தராததால் ஒரு சில வணிகர்கள் மட்டுமே கடைகளை அடைத்து ஆதரவு தந்தனர். அரசியல் கட்சிகள் திடீரென அறிவிக்கும்போது கடைகளை அடைக்கும் வியாபாரிகள், 25 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தராமல் புறக்கணித்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.