Skip to main content

பணத்தை மீட்டுத்தரக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

திருவாரூரில் சுலபத் தவணைகள் மூலம் மனை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நீதிமோகன் என்பவரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்  என ரமேஷ் என்பவர் செல்போன் டவர் மீது ஏறி ஐந்து மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

 

 person climbed into cell tower

 



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் வடக்கு வீதியில் 'கிருஷ்ணா ரியல் எஸ்டேட்' என்கிற பெயரில் நீதிமோகன் என்பவர் சுலபத் தவணை மூலமாக மனைகள் வழங்கியுள்ளார். அந்த சுலபத் தவணைத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்தும் தேடிவரத்துவங்கினர். இதற்காக பல இடங்களில் ஏராளமான முகவர்களை நியமித்திருந்தார்.  இதே தவணை முறையில் இடம் வாங்கிக் கொடுக்கும் முகவராக இருந்த ரமேசும் நூற்றுக்கும் அதிகமானவர்களிடம் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமோகன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மூடி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். பணம் வாங்கியவர்கள் ரமேஷிடம் தொந்தரவு செய்ததால், அவர் இதுகுறித்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த ரமேஷ் இன்று திடீரென திருவாரூர் வடக்குவீதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். 

 



இதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் ரமேஷிடம் பணத்தை திரும்பப் பெற்றுதர முயற்சிப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.  சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் செல்போன் டவரில் இருந்து ரமேஷ் கீழே இறங்கினார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக  திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் திருவாரூரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
 

சார்ந்த செய்திகள்