Skip to main content

ஏ.டி.எம்’ல் ஒரே மாதிரியாக ஏமாற்றம் அடைந்த இரு வேறு பகுதியை சேர்ந்தவர்கள்..!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

People from two different areas who were cheated same

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வருபவர் 50 வயது தன்ராஜ். இவர் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் அறிமுகமில்லாத ஒரு டிப்டாப் பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பத்தாயிரம் பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். உடனே அந்தப் பெண் இவரது பின் நம்பரை மட்டும் கேட்டு தெரிந்துகொண்டு, “ஏடிஎம்மில் கார்டை சொருகி பார்த்தேன். ஏடிஎம்மில் பணம் இல்லை” என்று பொய் கூறியுள்ளார்.

 

பின்னர் அவர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்குப் பதில் போலியான கார்டை தன்ராஜிடம் கொடுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகிவிட்டார் அந்த டிப்டாப் பெண்மணி. சில நிமிடங்களில் வேறு ஒரு ஏடிஎம் சென்டரில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக தன்ராஜ் செல்ஃபோனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்ராஜ், அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டார். அதன்பின் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்க ஓடினார். அதேபோல், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி சந்திரலேகா, உளுந்தூர்பேட்டை சேலம் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு நின்றிருந்த டிப்டாப் பெண்மணியிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். அவரிடமிருந்து ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு, ஏடிஎம்மில் பணம் இல்லை என்று கூறிய அந்தப் பெண், சந்திரலேகா கொடுத்த ஏடிஎம் கார்டுக்குப் பதிலாக போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார். சில மணி நேரத்தில் வேப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டரிலிருந்து சந்திரலேகாவின் கணக்கிலிருந்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார் அந்த டிப்டாப் பெண். பணம் எடுத்ததன் தகவல் சந்திரலேகாவின் செல்ஃபோன் எண்ணுக்கு குறுந்தகவலாக வந்துள்ளது. அப்போதுதான் சந்திரலேகா தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

 

அவரும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குப் பதறியடித்துக் கொண்டு ஓடினார். இருவரது புகார்களையும் பெற்றுக்கொண்ட உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இரண்டு நபர்களிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அவர்களது பணம் 67 ஆயிரத்தை ஆட்டையைப் போட்டது யார் என்று விசாரணை செய்து வருகின்றனர். அந்த டிப்டாப் பெண்மணி இப்படி ஏடிஎம் சென்டர்களில் பணம் எடுக்கச் செல்லும் படிப்பறிவு குறைவான நபர்களிடம் சாமர்த்தியமாக ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். அந்த டிப்டாப் மர்மப் பெண்மணி யார் என்பதை தீவிரமாக தேடிவருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட ஏடிஎம் சென்டர்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்