Skip to main content

கனியாமூர் பள்ளி மாணவியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Parents of Kaniamoor school girl meet with Principal

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த  மாணவியின் தாயார் செல்வி. 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

மாணவி உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான கைதும், ஒருபுறம் தொடர்கிறது. மற்றொரு புறம், அமைச்சர்கள், மாணவியின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, தொலைபேசி வாயிலாக மாணவியின் தாயாரிடம் பேசிய முதலமைச்சர், அவருக்கு ஆறுதல் கூறியதுடன், மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில், மாணவியின் தாயார் தனது மகளுக்கு நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக கடந்த 23 அன்று  அறிவித்திருந்தார். இதையறிந்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த தகவல் அமைச்சர்களுக்கு செல்ல, உடனடியாக மாணவியின் தாயாரைத் தொடர்பு கொண்ட அவர்கள், வரும் சனிக்கிழமை அன்று நீங்கள் முதலமைச்சரைச் சந்திக்கலாம். சந்திப்புக்கு முதலமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார் என்று கூறினர். 

 

இதைத் தொடர்ந்து, இன்று  சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவியின்  தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர்  நேரில் சந்தித்தனர். 

 

அப்போது  முதலமைச்சர்  அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். உடன்  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர்   வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்