ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த ஐந்து வீரர்களை உயர் சிகிச்சைக்காக விமானம் மூலமாக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் என்ற இடத்தில் நமது ராணுவ வாகனத்தின் மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தியது மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும். இந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.