
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து நிலையில் இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்து கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 'தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் பாஜக உடனான கூட்டணியைப் பொறுத்து கருத்து சொல்லக்கூடிய விஷயத்தில் எங்களுடைய தலைவர்கள் அவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்குமே திரும்பவும் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய தலைமை மோடி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் இந்த கூட்டணிக்குள்ள இன்னும் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது; புதிதாக வரக்கூடிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்வது என எல்லாமே தேசிய தலைமையினுடைய வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் நடக்கும்.
ஒவ்வொரு கட்சிக்குமே அவர்களுக்கு என்று தனியாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது. அவர்களுக்கென்று தனியாக ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அவர்களுக்கென்று அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் இடையேயான பரஸ்பரம் தான் கூட்டணி. கூட்டணி என்பது தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான். அதனால் தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளார்கள். அதனால் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எந்தெந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டும்'' என்றார்.