Skip to main content

சுத்தியலால் மகனை அடித்து கொன்ற முதியவர்; சொத்துக்காக தகராறு செய்ததால் ஆத்திரம்

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

Old man who beat his son to with a hammer; rage due to dispute over property

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சொத்துக்காக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் வையாபுரி (85). விவசாயி. இவருக்கு பூமாலை, துரைராஜ் (55) என்ற இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் பூமாலை இறந்துவிட்டதை அடுத்து வையாபுரி தனது இரண்டாவது மகனான துரைராஜ் வீட்டில் வசித்து வருகிறார். துரைராஜுக்கு மல்லிகா என்ற மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

 

வையாபுரி பெயரில் மூன்று சென்ட் நிலம் உள்ளது. இந்த சொத்தை பாகம் பிரித்துத் தரும்படி கேட்டு துரைராஜ் அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்து வந்தார். ஜூன் 8ம் தேதி இரவு காமக்காபாளையத்தில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாவிற்காக துரைராஜின் மனைவி, மகன்கள், மகள் ஆகியோர் சென்றிருந்தனர்.

 

அப்போது மது போதையில் வீட்டில் இருந்த துரைராஜ் சொத்தில் பங்கு கேட்டு தனது தந்தையை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். பிறகு போதையில் தள்ளாடியபடியே அவர் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குச் சென்று படுத்துக் கொண்டார். சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற வையாபுரி, வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற சுத்தியலால் தூங்கிக் கொண்டிருந்த துரைராஜின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

 

இதையடுத்து, ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த சுத்தியலுடன் வையாபுரி கெங்கவல்லி காவல்நிலையத்திற்குச் சென்றார். காவலர்களிடம் தான் மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து விட்டதாகக் கூறி சரணடைந்தார். அதையடுத்து காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்றனர். துரைராஜின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வையாபுரியை கைது செய்தனர். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மகனை அடித்துக் கொன்றுவிட்டதாக வையாபுரி விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கெங்கவல்லி சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்