Skip to main content

''என் புள்ள அண்ணன கொண்டாந்து நிப்பாட்டுங்கனு சொல்லுது''-கண்ணீரில் நார்த்தாமலை!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

Northamalai in tears!

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொத்தமங்கலம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளைவரை துளைத்துச் சென்றது.

 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு 4 மணி நேரம் போராடி மூளையிலிருந்த துப்பாக்கிக் குண்டு மற்றும் மண்டை ஓட்டின் துண்டுகளை மருத்துவ குழுவினர் அகற்றினார்கள். அதன் பிறகும் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே இருந்த சிறுவன் புகழேந்தி நேற்று மாலை உயிரிழந்தார்.

 

Northamalai in tears!

 

சிறுவன் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியான நிலையில் சிறுவனின் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல நார்த்தாமலை பொதுமக்கள் திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகனை இழந்த தாய் பழனியம்மாள் இது குறித்து கூறுகையில், ''எம்புள்ள எனக்கு உயிரோட வேணும். அந்த துப்பாக்கி சுடும் இடத்தை நிரந்தரமா இழுத்து மூடனும். எம்புள்ளைக்கு வந்த நெலம இனி யாருக்குமே வரக்கூடாது. எனக்கு இன்னொரு புள்ள இருக்குது. அந்த புள்ள என் அண்ணன கொண்டாந்து நிப்பாட்டுங்கனு சொல்லுது. நான் எப்படி அந்த புள்ளமுன்ன நிப்பாட்ட முடியும். அண்ணன் இல்லனு சொன்னா இப்போவே கதறுது'' என்றார் கண்ணீருடன்.

 

இந்தச் சம்பவம் குறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் கடந்த 31 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இன்று காலை விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே உள்ள பொம்மிடியாமலை, கீரனூர், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் 10 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்