Skip to main content

“ஆர்.என். ரவியின் புலம்பல்கள் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு 

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

No worries about RN Ravi's daily laments Minister Thangam Thanarasu

 

தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது, அரசுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவிப்பது எனத் தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டி வருகிறது.

 

இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது முதல், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.

 

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க.வின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு நேற்றைய தினம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் சென்று 'திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லும் அவர், எந்த வகையில் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால் விரிவாக விளக்கம் அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக, பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்வதைப் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

 

No worries about RN Ravi's daily laments Minister Thangam Thanarasu

'திராவிடம்' என்ற சொல் ஒருகாலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். 'திராவிடம்' என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம் என்பது பண்டித அயோத்திதாசர், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல் ஆகும். 'சாதி பேதமற்ற திராவிடர்கள்' என்று அழைத்தவர் பண்டித அயோத்திதாசர். தமிழ் என்பதே அதனை உச்சரிக்க முடியாதவர்களால் ''திரமிள' எனத் திரிந்து அழைக்கப்பட்டது என்பது மொழியியல் அறிஞர்கள் கருத்து. எனவே தான் தமிழ் - திராவிடம் என்பதை ஒரே பொருள் தரும் இருவேறு சொற்களாகப் பயன்படுத்தினார் தந்தை பெரியார்.

 

இத்தகைய திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்பவை, சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம்,  மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, இந்தியக் கூட்டாட்சி ஆகும். இதனை உள்ளடக்கியது தான் 'திராவிட மாடல்' ஆட்சியியல் கோட்பாடு ஆகும். தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  'எல்லார்க்கும் எல்லாம்' என்பதைத்தான் தனது இலக்காக முதலமைச்சர் குறிப்பிட்டு வருகிறார்கள். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்திப் பார்ப்பவை அல்ல. கோடிக்கணக்கானவர்களுக்கு, இலட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத்தான் முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல். அதன் 10 வது அத்தியாயம் 44 வது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. "பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தந்தம், கசம் இத்தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய் விட்டார்கள்" என்கிறது மனு. எது தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கம். இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், மீட்சிக்கும், உணர்ச்சிக்கும், உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

 

அவருக்குத் 'தமிழ்நாடு' என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அவருக்கு 'திராவிட இயக்கம்' பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக்கொள்ளப் போவது இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர். ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தைக் குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன, வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரச்சாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். 'ஆளுநர் பதவி என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம்' என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார். கடந்த அரை நூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்பது தான் உண்மை.

 

No worries about RN Ravi's daily laments Minister Thangam Thanarasu

'ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது. அவர் இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்' என்று முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.