நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த மே மாதம் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக் கொண்ட நிலையில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தின் மீட்புப் பணிகள் பல நாட்கள் நடைபெற்ற பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் அந்தக் கல் குவாரியை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் அரசு விதித்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் கல்குவாரி செயல்பட்டு வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இது போன்ற உயிர் பலி சம்பவங்கள் கல்குவாரிகளில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட இருக்கந்துரையில் அரசு வகுத்த வழிமுறைகளை கடைபிடிக்காமல் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்களை வெட்டி எடுத்த கல்குவாரி உரிமையாளர்கள் சபரீஸ்லால், அஜேஷ்லால் ஆகியோருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.