மயிலை வாகனமாக கொண்ட பாலசுப்பிரமணியர் குடிகொண்டுள்ள விராலிமலையில் உள்ள காடுகள் காணாமல் போனதால் மயில்கள் காணாமல் போனாலும், ஆலயம் உயர்ந்து நிற்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்திற்கு கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு இன்று (25.02.2021) குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அதிக பொருட்செலவில் திருப்பணிகள் நடந்துள்ளன.
பிரபலமான விராலிமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்த வேண்டும் என தமிழ்த்தேசிய பேரியக்கம் தெடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று தமிழில் ஓதுவார்களும், சமஸ்கிருதத்தில் அய்யர்களும் மந்திரங்கள் சொல்ல, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கைப் பார்த்தனர். இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சிறிய கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.