Skip to main content

பூமி பூஜை கல்லை எட்டி உதைத்தாரா செந்தில்குமார் எம்.பி?

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

MP SenthilKumar's viral video

 

நூலகங்கள் அறிவுத் தேடலை நிறைவு செய்கின்றன. வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் நம்மைப் பிற்போக்கு சிந்தனையில் இருந்து முற்போக்கு சிந்தனைக்கு இட்டுச்செல்கின்றது. அப்படியான உயர்ந்த சிந்தனைகளை கொண்ட மனிதர்களை உருவாக்கும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி வியாழன் அன்று அதியமான் கோட்டையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சி இந்து கலாச்சாரப் பண்பாட்டு முறைப்படி நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாகவே அரசு நிகழ்ச்சிகளில் இந்து முறைப்படி பழக்கங்கள் பின்பற்றப்படுமாயின் என்னை அழைக்காதீர்கள் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இந்தப் பூமிபூஜையில் செங்கல்களை எம்.பி. செந்தில்குமார் தனது காலால் எட்டி உதைத்தாக பரப்பப்பட்டது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, இந்த நிகழ்ச்சியில் இந்து முறைப்படி அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அவர், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை தாண்டி சடங்குகள் நடைபெற்றாலும். அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அமைதியாக கலந்து கொண்டார். 

 

இந்த நிகழ்வு முடிந்த பிறகு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தன் கட்சியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சண்முகத்திடம், “அரசு விழாக்களில் இந்து முறைப்படியான நிகழ்வுகள் இருக்குமானால், என்னை அழைக்க வேண்டாம் என உங்களிடம் தெரிவித்துள்ளேன். அதையும் மீறி சடங்கு சம்பிரதாயங்களை முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்வுக்கு என்னை நீங்கள் அழைத்துள்ளீர்கள்” என மென்மையாக கடிந்துகொண்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். 

 

மேலும், இதைப் பற்றி தர்மபுரி எம்.பி செந்தில்குமார் அவரிடம் கேட்ட போது, “நான் ஆரம்பத்திலே, இந்து சடங்குகள் மூலம் நிகழ்வு நடைபெறுமானால் என்னை அழைக்கவேண்டாம் என பல முறை தெரிவித்திருந்தேன். இருந்தும் அதுபோல நிகழ்வுகள் இல்லை எனக்கூறி என்னை அழைத்தனர். ஆனால் அந்நிகழ்வில் சடங்கு சமாச்சாரங்கள் நடத்தப்பட்டது. ஆனாலும் நான் இன்முகத்தோடு பொறுத்துக்கொண்டேன். இது இந்துத்துவா வாதிகளின் திட்டமிட்ட சதி அல்லது அவதூறு பிரச்சாரம்” என்றார்.    

 

 

சார்ந்த செய்திகள்