உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநிலத்திலும் பொது வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை.
அதேசமயம் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த 4 தமிழக அரசு பேருந்துகள் நெல்லித்தோப்பு அருகே மர்ம நபர்களால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசு மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடையாக உள்ளதாக கூறி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகையை இளைஞர் காங்கிரஸ் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் தடுக்கவே தடுப்பு கட்டைகள் மீது ஏறி கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் புதுவை பேருந்து நிலையத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்பை எரித்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.