Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி; ரூ1.15 கோடியில் புதிய சாலை அமைப்பு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Mithigudi road was constructed of Rs 1.15 crore by nakkheeran news

 

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகரிலிருந்து மீதிகுடி கிராமம்வரை 1800 மீட்டர் சாலை மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால் மீதிகுடி, கோவிலாம்பூண்டி, முத்தையாநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து கடந்த 3  மாதத்திற்கு முன்பு நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

இதனைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாதர் சங்க மாவட்டத்தலைவர் மல்லிகா, நகரத்தலைவர் அமுதா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கஜேந்திரன் உள்ளிட்ட கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து இதனைக் கொத்தங்குடி ஊராட்சி குடியிருப்போர் நல கூட்டமைப்பு  ஏற்படுத்தி  புதிய சாலை அமைக்க வேண்டும் எனப் போராட்டத்தை அறிவித்தனர்.

 

இதனையறிந்த பரங்கிப்பேட்டை ஒன்றியப் பெருந்தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடனடியாகச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 1 கோடியே 15 லட்சம் செலவில் கதிர்வேல் நகரிலிருந்து மீதி குடி கிராமம்வரை 1800 மீட்டர் நீளத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்