Skip to main content

சாலையில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர்!

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

minister nasar inspection is viral in social media

 

ஆவடியில் உள்ள ராட்சதக் குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சரின் செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயல் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அப்படிச் சேகரிக்கப்படும் குடிநீர், ராட்சதக் குழாய்கள் மூலம் சுற்றியிருக்கும் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 

இந்தக் குழாய் ஒன்றில் திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக குழாய் வால்வின் உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் சாலையில் வழிந்தோடியது. இதனையறிந்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சென்று உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் சற்றும் யோசிக்காமல் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதி செய்ய சாலையில் படுத்து வால்வு உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

minister nasar inspection is viral in social media

 

இச்செயல் அங்கு கூடியிருந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்பொழுது அமைச்சர், "உடனடியாக ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விரைவில் ராட்சத வால்வு சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்" என்று ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்