Skip to main content

காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி!!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021
Minister Muthusamy who provided welfare assistance to the police

 

கரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் தமிழக அரசு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (2.06.2021)காலை ஆணைக்கல் பாளையத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தங்கதுரை தலைமை தாங்கினார்.

 

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இதில் கலந்து கொண்டு போலீஸாருக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கென தனியாக 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 289 போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். கரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளது. 

 

எனவே மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உட்பட அனைவரும் ஒரே வழியைப் பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிகளுக்கென தனி வழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்