Skip to main content

“அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்” - தமிழக ஆயர் பேரவைத் தலைவர்

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

Manipur riot government should intervene find immediate solution says Tamil Nadu Synod President

 

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாகக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதை வெளியிலிருந்து பார்க்கும்போது, இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் போன்றே தெரியும். ஆனால், உண்மையில் அங்கு குக்கி இனக் கிறிஸ்தவ மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மெய்தி இன மக்கள் வாழும் பகுதிகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சில குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறி வைத்துச் சேதப்படுத்தி வருகின்றனர்.

 

இந்த தாக்குதல் சம்பவங்களில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீண்டும் பழைய மணிப்பூர் மாநிலம் உருவாகப் பொருளாதார ரீதியாக எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இருப்பினும் நடந்த கலவரங்களைக் கண்டித்தும், அரசு தலையிட்டு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். 

 

பேட்டியின் போது மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி, ஆயர்கள் அந்தோணிசாமி(பாளையங்கோட்டை), ஆரோக்கியராஜ்(திருச்சி மாவட்டம்), தமிழக துறவியர் பேரவைத் தலைவர் வேளாங்கண்ணி ரவி, மான்ஃபோர்ட் சகோதரர்கள் சபை மாநிலத் தலைவர் சகோதரி இருதயம், திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், வழக்குரைஞர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூன்றாவது முறையாக நிறைவேறிய சட்ட மசோதா; மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Bill passed for the third time; CM again letter to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

 

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.