Skip to main content

“நான் கும்பிடும் கோவிலில் நானே உற்சவமூர்த்தி!”- சிவகாசியில் பட்டாசாய் வெடித்த கமல்!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

makkal needhi maiam kamalhaasan speech at sivakasi

 

சிவகாசியில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரை நிகழ்த்தினார். 

 

“கூவத்தூரில் ஆரம்பித்தார்கள். இப்போது கூவமாகிவிட்டது. கூவத்தை சுத்தப்படுத்துவதாகச் சொன்னவர்கள் யாரும் அதைச் செய்யவில்லை. ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்காமல் ஐந்து லட்ச ரூபாய் கேளுங்கள். நான் எதுவும் தரமாட்டேன். மதத்தால் பிரிவினை செய்தால், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

 

இதற்காகவா எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னம் பெற்றார்?

 

மக்கள் திலகத்தின் மடியில் அமர்ந்தவன், நான். தமிழகமே சொந்தம் கொண்டாடும் மக்கள் திலகத்தின் மடியில் யாரை அமரவைப்பது என்று மக்களுக்குத் தெரியும். எஜமானி அம்மாள் இறந்த பிறகு, சாவிக்கு சண்டை போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னம் பெற்றதற்கான காரணம் வேறு. தற்போதைய நிலை வேறு. இரண்டு பேர் இலையில் சோறு போட்டுச் சாப்பிடுகிறார்கள். 

 

கிருமிகளைத் துரத்தும் விஷமில்லா கிருமிநாசினி! 

 

இந்த அரங்கத்தில் பார்க்கிறேன்.  இந்த மேடைப் பேச்சும் அரசியல்வாதிகளும் உங்களுக்கு புதிதல்ல. இந்த ஊர்காரரே வந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வர்றேன்னு சொல்லி எத்தனை வருஷம் ஆச்சு? இன்னும் வந்த பாடில்லை. நான் இங்கே வரும்போது எனக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும். என்னுடைய உறவினர்களிடம்,குடிக்கத் தண்ணீர் இருந்தால்தான், எனக்கு குடிப்பதற்குக் கொடுப்பார்கள். இந்தக் குடி தண்ணீருக்கான ஏற்பாட்டைச் செய்வது அவ்வளவு கடினமா என்று யோசித்துப் பார்த்தால்.. இல்லை. இது பொது ஜனத்திற்கு.. பாதசாரிகளுக்குக்கூடத் தெரிந்த உண்மை. ஒரு கை நீங்கள் கொடுத்தால், அதைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும் மக்களுக்கும் அதில் பங்கு இருக்கிறது. நம்முடைய சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தற்போது என்ன ஆகிவிட்டது என்றால், மக்கள்தான் தங்களது தலைவர்களை நல்லவர்களாக வைத்திருக்க வேண்டும். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் கெட்டு போய்க்கிட்டே இருந்தாங்கனா.. நாடு நல்லா இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இப்ப வீட்டைக் கழுவிவிட்ட மாதிரி.. சுத்தம் பண்ண ஒரு அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. மக்கள் நீதி மன்றம் என்ற ஒரு பாட்டிலில், விஷம் இல்லாத கிருமி நாசினியை நிரப்பி வைத்திருக்கிறோம். இந்தக் கிருமிகளை எல்லாம் துரத்திவிட்டு, சுத்தமான ஒரு அரசை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது ஆசை மட்டும் அல்ல.  திட்டத்துடனே வந்திருக்கிறோம். 

 

makkal needhi maiam kamalhaasan speech at sivakasi

 

 

பட்டாசு மட்டுமா மாசு? 

 

இங்கே பட்டாசுத் தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்குத் தெரியும். பட்டாசால்தான் ஓரளவுக்குச் சூழல் மாசுபடுகிறது என்பதும் தெரியும். அது ஒரு விசயம்தானே? அதைவிடப் பெரிய விஷயங்கள் இருக்கிறதே? நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல ஃபேக்டரிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம், கையூட்டு வாங்கிக்கொண்டு கதவைத் திறந்து விடுகிறார்கள். என்றைக்கோ, ஒரு நாள் வெடிக்கிற பட்டாசை நிறுத்தச் சொல்றாங்க. நானும் ஒத்துக்கிறேன். அதற்காக, இந்தப் பட்டாசை வெடிச்சிக்கிட்டே இருக்கணும்னு நான் சொல்லவில்லை. ஆனால், இதற்கு மாற்று கொடுக்க வேண்டியது அரசின் கடமை. 

 

உங்களுக்கு.. இந்தத் தொழிலாளர்களுக்கு திடீர்ன்னு ஒரு நாள் சட்டம் போட்டு உங்களுக்கு பொழப்பு கிடையாதுன்னு சொல்லக் கூடாது. எந்த நியாயமான அரசும் அதைச் சொல்லக் கூடாது. அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்போகிறோம். இனி இதுதான் வழியாக இருக்கும் என்பதை.  உங்களுக்குப் புரிய வைப்பதற்குக் குறைந்தது 4 வருடமாவது வேண்டும். அந்த 4 வருடத்திற்குள், உங்களால் வேறு துறையில் தொழிலைக் கற்றுக்கொள்ளவும், திறமைகளை வளத்துக்கொள்ளவும் முடியும். இதுல..  பெரியவங்க, சிறியவங்கங்கிற வயசு வித்தியாசமே இல்லை. மறுபடியும் பள்ளிக்கூடத்திற்கு போகணும்கிறது இல்ல. நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலின் கிளையாகவே மாற்றுத் தொழிலை அமைத்துத்தர முடியும். அதைச் செய்யாமல், திடீரென்று கடையை மூடச்சொன்னால்,  யாருமே மூட மாட்டாங்கங்கிறது எங்களுக்குத் தெரியும். 

 

எல்லோரும் இந்நாட்டில் தெய்வமாகலாம்!

 

நீங்கள் கும்பிடும் கோவிலில் நேர்மை இருக்கவேண்டும். நான் கும்பிடும் கோவில் அதுமட்டும்தான். அங்கு உள்ளேயிருக்கும் உற்சவமூர்த்தி யாரென்று கேட்டால், அது நான். நீங்களும் அதுவாகவே இருக்கவேண்டும். நேர்மை என்னும் கோவிலில் நீங்களே தெய்வங்களாக ஆகவேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னராகலாம் என்றால்.. எல்லோரும் இந்நாட்டில் தெய்வங்கள் ஆகலாம். அந்தத் தன்மை வேண்டும் உங்களுக்கு. அது இல்லாதவர்கள், அந்த இடத்துக்கு ஆசைப்படக்கூடாது. உங்களிடம் நான் சொல்வதெல்லாம், இந்தக் குடிநீர் மக்களின் உரிமை. அதைக் காசு கொடுத்து வாங்கக்கூடாது. இதுதான் என்னுடைய தொலைநோக்கு. உடனே, குடிநீர்ப்பஞ்சத்தை போக்க முடியும். அதற்கு வழிகள் இருக்கிறது. திட்டங்கள் இருக்கிறது. எங்களிடம் அதிகாரிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அன்பானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அறிவானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

 

200 வருடம் உயிரோடு இருப்பவரைக் காட்டுங்கள்!

 

ஐந்து வயதிலிருந்து உங்கள் தோளிலிருந்து நீங்கள் என்னை இறக்கிவிட்டதே கிடையாது. டான்ஸ் கற்றுக்கொள்ளச் சென்றபோது, நானாக ஒரு ஐந்து வருடங்கள் உங்களுக்கு ஓய்வு கொடுத்தேன். உங்களுக்காக, நான் இதைக்கூடச் செய்யாமல், எப்படிப் போவது இந்த உலகைவிட்டு? அதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். என்ன நீங்க அறம் பேசுறீங்கன்னு கேட்கிறார்கள். இங்கே யாராவது 200 வருடம் உயிரோடு இருக்கிறாங்கன்னு சொல்லுங்க. நான் இந்த மாதிரி பேச்செல்லாம் பேசமாட்டேன்.  

 

எல்லோருக்குமே குறுகிய காலகட்டம்தான் இருக்கிறது. அதற்குள், நீங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை, விட்டுச்செல்ல வேண்டும். அது பிள்ளை, குட்டிகளாக இருந்தால் போதாது. நீங்கள் கட்டிய வீடாக இருந்தால் போதாது. நல்ல கட்டமைப்புள்ள சமுதாயத்தை நீங்கள் விட்டுச்செல்ல வேண்டும். அதைத்தான் நானும் செய்யப்போகிறேன். அதை நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து செய்வோம். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல வரவில்லை. உங்கள் குறைகளையெல்லாம் சொல்லுங்கள். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, ஆவண செய்வோம். நன்றி.. விட்டால் பேசிக்கொண்டே இருப்பேன். உங்கள் குதூகலத்தைப் பார்க்கும்போது, எனக்கும் குதூகலமும் தன்னம்பிக்கையும் வருகிறது.” 

 

தொடர்ச்சியான கைதட்டல் மற்றும் ஆரவார விசில் சத்தத்துக்கிடையே, மிகவும் பொறுமையாக, தனது பாணியில் பேசினார், கமல்ஹாசன்!

 

 

சார்ந்த செய்திகள்