Skip to main content

மஜகவின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பொதுக்கூட்டம்: கருணாஸ், தனியரசு பங்கேற்பு

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
mjk


மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூகநீதி பொதுக்கூட்டம்  நாகை (தெற்கு) மாவட்டம் சார்பில் பிப்- 28- 2018 அன்று நாகப்பட்டிணத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA,  முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


அரங்கத்தில், முன்னதாக தமிழை தேசிய மொழியாக்க குரல் கொடுத்த காயிதே மில்லத்தின் பெயரால் கொடி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 


மேடைக்கு சமூக நீதி காத்த வீராங்கனை ஜெ.ஜெயலலிதா அம்மா மேடை  என பெயர் சூட்டப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்ற அவுரித் திடலுக்கு சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் V.P சிங் என்றும், நீட் தேர்வு எதிர்ப்பு போராளி தியாகி அனிதா என்றும் நுழைவாயில்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

 
பெண்கள் பகுதிக்கு தூய்மையான பொது வாழ்வின் ஊழியர் என்று அழைக்கப்பட்ட அன்னை தெரஸா அவர்களின் பெயரும், ஆண்கள் பகுதிக்கு தமிழர்களின் இனமானம் காத்த தந்தை பெரியாரின் பெயரும் சூட்டப்பபட்டிருந்தது. திடல் முழுக்க WiFi வசதி செய்யப்பட்டிருந்தது ஒரு புதிய முயற்சியாகும். 

 

mjk2

எல்லா சமூக மக்களும் வேறுபாடின்றி கலந்து கொண்டது மஜகவின் சிறப்பை எடுத்துக் காட்டியது. அரங்கத்திற்கு வெளியே புத்தக கடைகள் நிறைய இருந்தன. அங்கும் கூட்டம் அலைமோதியது. மாலை 7.00 மணியளவில் தொடங்கிய கூட்டம் இரவு வரை அதே எழுச்சியோடு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


இக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரியின் 22 மாத தொகுதி செயல்பாடு அறிக்கையை கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் வெளியிட மும்மத தலைவர்கள், "தமிழ்செம்மல்" செய்யது முஹம்மது கலிபா சாஹிப், மஞ்சகொல்லை பிள்ளையார் கோயில் குருக்கள் குமாரசாமி, குருக்கள்.ரமேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 

மஜக தலைமைக் கழக வளர்ச்சி நிதியாக 1 லட்சம் ரூபாயை நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களிடம் வழங்கினர்.  கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், வாஞ்சூர் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும், தமிழக மீனவர்களின் கடல் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்., நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

 இப்பொதுக் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கானோர் திரண்டிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் நாகை மாவட்டத்தை தங்களது கோட்டைகளில் ஒன்றாக மஜக நிரூபித்திருக்கிறது என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளது மஜகவின் தகவல்தொழில் நுட்பஅணி.
 

சார்ந்த செய்திகள்