தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று (30.12.2019) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 8 ஒன்றியங்களில் நடக்கிறது. குறைந்தது 7 நாட்கள் அழிக்க முடியாது என்று தேர்தல் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட வாக்காளர் விரலில் வைக்கப்படும் அடையாள மை வைத்த சில நிமிடங்களிலேயே சாதாரண நீரில் கழுவினாலே போய்விடுகிறது என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் திருச்சியில் லால்குடியில் உள்ள கீழ வாளாடி பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வாக்கு பதிவு மையம் உள்ளது. இந்த மையத்தில் வாக்களித்துவிட்டு வந்தவர்களில் சிலர் வாக்களித்த பின்பு வெளியே வந்தவர் கையில் அடையாளமாக உள்ள மையை அழித்த போது உடனே அழித்து விடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே தேர்தல் அலுவலர்களிடம் இது குறித்து பொதுமக்கள் புகார் தெரித்த போது தேர்தல்அலுவலரோ, 'நாங்க என்னங்க பண்ண முடியும் எங்களுக்க கொடுத்த மை தான் நாங்க வச்சிருக்கோம்' என்கிறார்கள்.