உத்திரபிரதேசம் மாநிலம் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜஹான்கிராபாத்தில் வசித்து வருபவர் மோகித்(20). இவர் பி.காம் இறுதியாண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தன்னுடைய வாக்கினை செலுத்துவதற்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி நடந்த வாக்குபதிவு அன்றைக்கு தனது வாக்கினை செலுத்திவிட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது மோகித்தைப் பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் பாம்பு கடித்த மோகித்தை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிலர் மருத்துவரால் இது குணமாகாது கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பின் விஷம் இறங்கி மோகித் குணமடைவார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, மோகித்தின் உறவினர்கள் அவரது உடலில் கயிற்றைக் கட்டி கங்கை நதியில் மோகித்தின் உடலை போட்டு வைத்து வந்துள்ளனர். இதில் பாம்பின் விஷம் உடல்முழுவதும் பரவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் இதைக்கூட அறியாமல், மோகித்தின் உடலை இரு தினங்களாக கங்கை நதியில் உறவினர்கள் போட்டு வைத்துள்ளனர்.
இதனைக் கவனித்த மக்கள் மோகித்தின் உடலை மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மோகித்தின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். அதில், பாம்பு கடித்த மோகித்தை மருத்துவரிடம் அழைத்து செல்லாமல், கங்கை நதியில் உடலை நனைத்தால் குணமாகும் என்ற மூடநம்பிக்கையினால் இளைஞரின் உயிர் பிரிந்திருப்பது தெரியவந்தது.