அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகாசியில் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த 5 ஆண்டுகள் பால் விலை உயர்வு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை விலை உயர்த்தி அறிவித்திருந்தால், இது பெரிதாக தெரிந்திருக்காது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. பால்விலையை உயர்த்தக்கூடாது என்று தமிழக முதல்வர் முடிவு செய்திருந்தார்.
தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பால் விலையை உயர்த்த வேண்டியிருந்தது. பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதால்தான் இந்தவிலை உயர்வு. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பி இந்த விலை உயர்வை அறிவிக்கவில்லை.
விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியபோது மிகுந்த மகிழ்ச்சியோடுதான் உயர்த்திக் கொடுத்தோம். அதே நேரத்தில் பால்விலை உயர்வை அறிவிக்கும்போது மிகுந்த சங்கடத்தில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பால் விலை குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தனியார் பால் விலையை விட ஆவின் விலை குறைவுதான். மற்ற மாநிலங்களில் பால் கொள்முதலில் கொடுக்கப்படும் விலையைவிட தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கூடுதலாக விலை கொடுக்கப்படுகிறது.
அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவுக்கு மக்கள் ஆதரவாகத்தான் இருப்பார்கள். இதை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மட்டுமே அரசியலாக்குகிறார்கள்.தமிழகத்திலுள்ள 20 மாவட்ட மக்கள் பால் உற்பத்தி பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நலன் கருதியே அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.” என்று பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்தார்.