Skip to main content

கோமாரி நோய் பாதிப்பு எதிரொலி!!! – மூடப்பட்ட மணப்பாறை மாட்டுச் சந்தை 

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
manaparai

 

தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச் சந்தைதான் புகழ்பெற்றது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். இது மட்டுமின்றி இந்த நாட்களில் சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

இந்நிலையில் கோமாரி நோய் தாக்கம் காரணமாக மாட்டுச் சந்தை நேற்று செயல்படவில்லை. இதனால், சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டு, நோய் வாய்ப்படுகின்றன. கால்நடைகளுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதால், நான்கு வாரங்களுக்கு மாவட்டத்தில் மாட்டுச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்லவோ, புதிதாக வாங்கவோ, விற்கவோ, வேண்டாம் என கால்நடைத்துறை அறிவுரை வழங்கியது. இதனால், வழக்கமாக மணப்பாறையில் கூடும் மாட்டுச்சந்தை நேற்று கூடவில்லை. இதனால், கால்நடை சந்தை மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது. 
 

 

 

சார்ந்த செய்திகள்