Skip to main content

தாயின் தோடை 600 ரூபாய்க்கு அடகு வைத்துதான் படித்தேன்... மலைக்கிராம மக்களிடம் நெகிழ்ந்த டி.ஐ.ஜி!

Published on 11/10/2020 | Edited on 11/10/2020
kodaikkanalb police

 

கொடைக்கானல் மேல்மலையில் உள்ள பெரும்பாறை அருகே கே.சி.பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கல்லக் கிணறு என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி நேரடியாக சென்று அங்கு வசிக்கின்ற குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் பழங்குடியின மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது பழங்குடியின மக்கள் குப்பம்மாள்பட்டியிலிருந்து கல்லக்கிணறு வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், புலையர் இன மக்களை மீண்டும் பழங்குடி ஆதிவாசி பட்டியலில் சேர்க்கவேண்டும், யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவேண்டும், கல்லகிணறு ஆற்றை கடந்து செல்ல சிறுபாலம் அமைக்க வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் வனநில உரிமை பட்டா வேண்டும் என கோரிக்கைகளை  வைத்தனர்.

அதேபோல் பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கும், விடுதி கட்டணம் செலுத்துவதற்கும் உதவ வேண்டும் என்று மாணவ-மாணவிகளும் கோரிக்கை வைத்தனர். அதைக்கேட்ட டி.ஐ.ஜி முத்துசாமி,  இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து உதவி  செய்கிறேன் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள் அனைவருக்கும் டி.ஐ.ஜி முத்துச்சாமி நேரடியாக உதவிகளை வழங்கியது கண்டு பழங்குடியினர் மக்கள் மனம் குளிர்ந்து போய் விட்டனர். அதுபோல் கொடைக்கானல் கீழ்மலை பழங்குடி  கிராமங்களுக்குச் சென்று அப்பகுதியில் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்பொழுது பழங்குடி மக்களிடம் டி.ஐ.ஜி முத்துச்சாமி பேசுகையில், ''எனது தாய் 600 ரூபாய்க்கு தனது தோடை அடகு வைத்து படிக்க வைத்து, அதனால்தான் இன்று நான் டி.ஐ.ஜியாக இருக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியாக கூறினார். இந்த நிகழ்வில் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்  ஜெய சிங் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்