Skip to main content

''நீங்கள் கொடுங்க அல்லது எங்களை கொடுக்க விடுங்க...''- கரூர்  எம்.பி. உருக்கம்

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் இருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், 


“இரண்டு தினங்களாக கடும் மனஉளைச்சல், அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. எனது 23 ஆண்டு அரசியல் அனுபவத்தில், அரசியல் பல நேரங்களில் இதயமற்ற சிலரின் இடமாக இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

 

"You Give or we Give  ..." - Karur MP


சுனாமி, கடலூர் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரில் பணியாற்றும்போது, மக்களிடையே மனிதாபிமானம் பொங்கி எழுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் கரோனா எனது சொந்த மண்ணிலேயே அரசியலின் கொடூரத்தை எனக்குப் புரிய வைத்த போது அதிர்ந்து உறைந்து போனேன்.

 

nakkheeran app



லாக் டவுன் அறிவிக்கப்பட்ட உடனே கரூரில் இருக்கும் ஏழைகள், வயதானவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த கவலை என்னை வாட்டியது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கவலைப்பட வேண்டாம். எல்லோருக்கும் உணவு கொடுக்கலாம் என்றார்.

அன்று நாங்கள் கரூர் அரசு மருத்துவமனையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்துவிட்டு திரும்பும்போது புகைப்படத்தில் இருக்கும் பெரியவரை பார்த்தேன், மனது வலித்தது. இறங்கிப் போய் பேசினேன். பசிக்குது என்றார். மனம் கலங்கிப் போனது. என்னைப் பார்த்ததும் செருப்பு தைக்கும் அண்ணன்கள் ஓடி வந்தார்கள். யாருமே வந்து பாக்கலைம்மா பசிக்குது என்றார்கள். அன்று மாலையே செந்தில் பாலாஜி உணவு விநியோகத்தை தொடங்கினார். முதல் நாள் இரவு 160 பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. தன்னார்வலர்களாக இளைஞர்கள் குவிந்தனர். வீடு வீடாக, தெருத்தெருவாக உணவு விநியோகம் நடந்தது.

 

"You Give or we Give  ..." - Karur MP


ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு ஒருவர் என்னை தொலைபேசியில்  அழைத்தார். அம்மா என் பேர் கருணாநிதி, மாப்ளையும், நீயும் சாப்பாடு போடாறீங்கன்னு பேப்பர்ல படிச்சேன். (செந்தில்தான் சாப்பாடு போட்டது. நான் எனது ஒரு மாத சம்பளத்தை அதுவும் எனது மனதிருப்திக்காக என்று வற்புறுத்திக் கொடுத்தேன்) நான் வந்து அங்க வேலை செய்கிறேன் என்றார். எப்படி சும்மா சாப்பிடுவது என்று யோசிக்கிறாரோ என்று நினைத்தேன். நடுத்தர வயதைத் தாண்டிய குரல் அவருடையது. நான் சாப்பாட்டுக்கு வூட்டுக்குப் போயிடுவேன். ரெண்டு பேரும்  இவ்வளவு கஷ்டப்படறீங்க. இந்த நேரத்துல எதாவது உதவி செய்யனும்னு தோணுதும்மா என்றார். பலபேர் தங்கள் பக்கத்து வீடுகளில், தெருக்களில் பசித்தவர்களை அடையாளம் கண்டு அழைக்கத் துவங்கினர்.

மிக ஏழையானவர்கள் என்பதால்  அவர்களுக்கு உதவி தேவைப்படும் என நினைத்து நான் தொலைபேசியில் அழைத்த ஒரு குடும்பம், எங்களுக்கு வேண்டாம். எப்படியோ சமாளிக்கிறோம். ஆனா எங்க தெருவுல குப்ப பொறுக்கறவங்க பத்து, பன்ணெண்டு பேர் இருக்காங்க. அவுங்களுக்கு குடுத்தா போதும் என்றனர். எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. எப்ப உதவினாலும் கூப்புடுங்க அக்கா என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

செந்தில் போன் இடைவிடாமல் அடித்துக் கொண்டே இருக்கும். கரூர் தாண்டி கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதி வரை உணவு போனது. முதல் நாள் இரவு  160 பொட்டலங்கள் நான்காவது நாள் 3,280 ஆக உயர்ந்தது. அதற்கு பின்பு நாங்கள் கணக்கே வைத்துக் கொள்ளவில்லை. உலை எந்த நேரமும் கொதித்துக்கொண்டே இருந்தது.

 

"You Give or we Give  ..." - Karur MP


கரூர் எங்கும் செய்தி பரவி மக்கள் தாமாகவே முன்வந்து, ஏழை மக்களுக்காக உணவு கேட்கத் தொடங்கினர். எப்பொழுதாவது ஓரிருவரும், சமாளித்துக் கொள்ளக் கூடியவர்களும் அழைப்பதுண்டு. முடியாதவங்களுக்கு தருகிறோம், முடியலைன்னா சொல்லுங்க அனுப்பறோம் என்றால் சாரிங்க அவுங்களுக்கே கொடுத்திருங்க என்றனர்.

பரவலாக மக்கள் இந்த முயற்சியைப் பாராட்டிப் பேச  ஆரம்பித்ததும் கரோனாவைவிட, கொடிய அரசியல் உள்ளே புகுந்தது, தனது அதிகாரத்தை முழுவீச்சில் பயன்படுத்தியது. காவல்துறையும், வருவாய்த்துறையும் உடனடியாக களத்தில் இறக்கப்பட்டன. இவ்வளவு டார்ச்சர்தான் என்று கிடையாது,  பசித்த வயிறுகளில் அடித்து உணவு கொடுப்பதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்திய பிறகே ஓய்ந்தது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் இந்த சவாலான நேரத்தில் அரசோடு நிற்கிறோம். இம்மாதிரியான கொடூரங்கள் அரசின் மீதான  நல்லெண்ணத்தை குலைக்கும். மற்ற அமைப்புகள் தமிழ்நாடெங்கும் உணவு வழங்கும்போது, கரூர் மக்கள் மட்டும்  எதற்கு பட்டினி கிடக்கவேண்டும்? ஒரு MPயும், MLAவும் பசித்த வயிறுக்கு உணவிட முடியாவிட்டால்  இருந்தென்ன பயன்?

நீங்கள் உணவு கொடுங்கள் அல்லது எங்களைக் கொடுக்க விடுங்கள். உங்கள் பதவியை வைத்து இரக்கமற்ற அரசியல் செய்ய  இது நேரமல்ல. உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களை பசியால் கொன்றுவிடாதீர்கள் என்று கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்